தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் எம்.பி. அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பின் தமிழகத்தில் மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் “மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தது நான் தான். மதுரை தோப்பூரில் 100 ஏக்கரில் எய்ம்ஸ் அமைக்க முதல் தவணையாக ரூ.150 கோடி ஒதுக்கி 2008ல் அடிக்கல் நாட்டியதும் நானே. ஆனால், பின் வந்த அதிமுக அரசு அதை செயல்படுத்தவில்லை. இதுகூட தெரியாதவர் தேசத்தை ஆளும் கட்சியின் மாநிலத் தலைவி.
இது அரசியல் அனுபவம் கொண்டவர்களுக்கு தெரியும். அப்போது அரசியலை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது” என ஒரு பதிவை இட்டிருந்தார்.
இதையடுத்து, அவருக்கு பதில் கூறும் விதமாக தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் “நிதி ஒதுக்கியதாக சொல்கிறீர்கள். அதன்பின்பும் பாராளுமன்ற உறுப்பினராக தொடரும் நீங்கள் எத்தனைமுறை மதுரை எய்ம்ஸ் பற்றி பேசினீர்கள்? தர்மபுரிக்கும் எய்ம்ஸ் வேண்டும் என்றுதானே குழப்பினீர்கள்?அரசியல் அனுபவம் பற்றி பேசுகிறீர்கள். நான் தந்தை நிழலில் பதவி பெறவில்லை சாதியைவைத்து சாதிக்கவில்லை” என ஒரு டிவிட்டும்,
சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் நாடெங்கும் பல தரமற்ற புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க முறையற்ற அனுமதிகள் வழங்கியதில் நீங்கள் காட்டிய வேகம் விவேகம் ஏன் தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொணர காட்டவில்லை? மருத்தவ கல்லூரி அனுமதி ஊழல் வழக்குக்காக இன்னமும் நீதிமன்றம் அலைவதும் மக்களுக்கு தெரியும்” என ஒரு டிவிட்டும் இட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, அன்புமணியும், தமிழிசையும் மாறி மாறி டிவிட்டரில் எதிர்கருத்துகள் தெரிக்க, பாஜக மற்றும் பாமக ஆதரவாளர்கள் மோதிக்கொள்ள டிவிட்டரே களோபரம் ஆகியுள்ளது.