பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது மகன் பாஜக ஒழிக என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்படுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் செய்தியாளர்களை சந்தித்த ஒரே தலைவராக இருப்பவர் தமிழிசை சவுந்தர்ராஜன்தான். செய்தியாளர்கள் என்னதான் கேள்வி கேட்டு மடக்கினாலும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை அவர் நிராகரித்ததில்லை. நேற்று அதேப்போல தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்து அவர் பேசிக் கொண்டிருந்த போது அவருக்குப் பின்னால் வந்த அவரது மகன் ‘பாஜக ஒழிக’ எனவும் பாஜகவுக்கு எதிராகவும் கோஷமிட்டார். இதனையடுத்து தமிழிசையின் ஆதர்வாளர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழிசையின் மகன் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழிசை செய்தியாளர்களிடம் இதுபோல பேசிக்கொண்டிருக்கும் போது ஆட்டோ டிரைவர் ஒருவர் கேள்வி எழுப்பியதை அடுத்து பாஜகவினர் அவரைத் தாக்கினர். மற்றொரு முறை விமான நிலையத்தில் மாணவி சோபியா பாஜக வுக்கு எதிராகக் குரல் எழுப்ப அவருக்கு எதிராக தமிழிசை வழக்குத் தொடர்ந்தார். ஆட்டோ டிரைவரைத் தாக்கியும் மாணவி சோபியா மீது வழக்குத் தொடர்ந்தும் அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக இப்போது என்ன செய்யப்போகிறது எனக் கேள்வி எழுந்துள்ளது.