தமிழக எல்லைப்பகுதிகளில் கொரோனா அறிகுறி தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு தற்போது வரை இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கேரளா, கர்நாடகா பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி எல்லைப்புற மாவட்டங்களில் ஷாப்பிங் மால், திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு 60 கோடி நிதி ஒதுக்கியுள்ள முதல்வர் பொதுமக்கள் அரசின் ஆலோசனைகளை கேட்டு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.