ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தராததை கண்டித்து பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் மூலம் தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் 25 லட்சம் லிட்டர் பால் நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பால் ஆவின் நிறுவனத்திற்கு ஆங்காங்கே உள்ள பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் பெறப்படுகிறது. இந்நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் முன்வைத்தனர். இதுதொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்டவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் ஆவினுக்கு பால் தருவதை நிறுத்தி இன்று முதல் போராட்டம் நடத்துவதாக பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் “பசும்பால் மற்றும் எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கும்படி கேட்டோம். இருந்தபோதிலும் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே சில காலம் முன்பாக உயர்த்தி வழங்கினார்கள். இதுதவிர கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான காப்பீடு குறித்த கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படவில்லை. அதனால் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்புவதை நிறுத்தி போராட்டத்தை தொடர்கிறோம்.
இந்த போராட்டத்தின் மூலம் காலை மாலை தலா 50 ஆயிரம் லிட்டர் பால் அனுப்புவது குறைக்கப்பட்டு 5 நாட்களில் 10 லட்சம் லிட்டர் பால் விநியோகம் ஆவினுக்கு நிறுத்தப்படும்” என கூறியுள்ளார்.
ஆவின் தங்களது கோரிக்கைக்கு முன் வராவிட்டால் தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலை கொடுக்க இருப்பதாகவும், அவர்கள் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று போராட்டம் நடந்து வரும் நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி ஈரோடு அடுத்த நசியனூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் வந்து சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தியுள்ளனர்.