தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில் மாணவர்கள் சிலரின் பதிவு எண்கள் இடம்பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளில் 100% அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது.
ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 9,45,006 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்ச்சி முடிவுகள் 9,39,829 பேருக்கு மட்டுமே வந்துள்ளதும், மீதமுள்ள 5,177பேரின் தேர்ச்சி குறித்த தகவல்கள் இல்லாததாலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மூலம் எழுத இருந்த மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் குறித்தும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.