ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் சீசன் தொடங்கும் போது கன்னியாகுமரியில் பல தற்காலிக கடைகள் அமைக்கப்படும். மாநிலம் முழுவதிலும் இருந்து கன்னியாகுமரி வழியாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த தற்காலிக கடைகள் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் கன்னியாகுமரியில் தற்காலிக கடைகளை ஏலம் விடும் விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏலம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 350 தற்காலிக கடைகளை ஏலம் விட பேரூராட்சி தலைவர் முன் வந்த போது மொத்த கடைகளையும் இரண்டு பேர் மட்டுமே ஏலம் எடுத்து கைமாற்றி விடுவதாகவும் திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஏலம் விடுவது ரத்து செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியும் தீர்மான புத்தகத்தில் அதை பதிவு செய்யவில்லை என்பதால் திமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.