கொரோனா பாதிப்புகளை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி வரும் நிலையில் தஞ்சாவூரில் இளைஞர்கள் கூடி விருந்து நடத்தி கொண்டாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அவசியமின்றி வெளியே சுற்றி திரிவதை தவிர்க்குமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இளைஞர்கள் பலர் அரசின் அறிவுறுத்தல்களை செவி மடுக்காமல் தங்கள் விருப்பம் போல பொழுதை கழித்து வருகின்றனர். சமீபத்தில் திருப்பூரில் காட்டுக்குள் கேரம் போர்டு விளையாடிய இளைஞர்கள் போலீஸின் ட்ரோனை கண்டதும் தெறித்து ஓடிய சம்பவம் இணையத்தில் வைரலானது.
அதை தொடர்ந்து தஞ்சாவூரில் நடந்த கறி விருந்து தற்போது வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் அருகே கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் காட்டுக்குள் கறி சமைத்து விருந்து நடத்தியதோடு அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இளைஞர்களின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து இந்த விருந்தை நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.