தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதி சடங்கில் நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த கடந்த 28ம் தேதி மறைந்த நிலையில் அவரது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுடலுக்கு ஏராளமான திரைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய்யும் அவ்வாறு நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும்போது மர்ம ஆசாமி அவர் மீது செருப்பை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது கோயம்பேடு கே-11 காவல் நிலையத்தில் தென்சென்னை மாவட்ட தளபதி மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் க.அப்புனு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் “கடந்த டிசம்பர் 28ம் தேதி அன்று திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்க விசாரிப்பதற்காக இரவு சுமார் 10.30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை கழற்றி எரிந்துள்ளார்.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள், அவர்களின் சொந்தங்கள் மற்றும் அவர் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.