Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.! தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்..!!

Vaiko

Senthil Velan

, சனி, 13 ஜூலை 2024 (10:35 IST)
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தாத கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-ஆவது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தரப்பில், “தற்போது மேட்டூர் அணையில் 12.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ள 4 அணைகளிலும் 27.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. அங்கு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஜூன் 24-ஆம் தேதிவரை 4 அணைகளுக்கும் 7.236 டிஎம்சி நீர் வந்துள்ளது. இந்நிலையில், காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு ஜூன் 24-ஆம் தேதி வரை தமிழகத்துக்கு 7.352 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி வரை 1.985 டிஎம்சி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது.

இன்னும் 5.367 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. இதேபோல ஜூலை மாதத்தில் கர்நாடகா 31.24 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும். கர்நாடக அரசு முறையாக காவிரி நீரை திறந்துவிடாததால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 
இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஜூன் மாதத்தில் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி நீரையும், ஜூலை மாதத்தின் 31.24 டிஎம்சி நீரையும் தமிழகத்துக்கு வழங்குவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும். இரு மாநிலங்களின் நீர் இருப்பு மற்றும் தேவை குறித்து இரு மாநில அதிகாரிகளையும் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிக்கிறேன்” எனக்கூறி, கூட்டத்தை ஒத்திவைத்தார்.
 
டெல்லியில் நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடக அரசு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ஆம் தேதி வரை திறந்துவிட வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரையை அலட்சியப்படுத்திவிட்டு, தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது குறித்து முடிவு எடுப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி உள்ளார். 
 
இந்தக் கூட்டத்துக்கு பிறகு சித்தராமையா செய்தியாளர்களிடம் “காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி தமிழகத்துக்கு 1 டிஎம்சி நீரை திறந்துவிடுவதில்லை என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், நிகழாண்டில் 28 சதவீதம் குறைவாக மழை பொழிந்துள்ளது. ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
 
நீர்ப்பாசன ஆண்டு கணக்குப்படி, கர்நாடகா அரசு, தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 177.24 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 81 டிஎம்சி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 96 டிஎம்சி தண்ணீர் நிலுவை வைத்துள்ளது. நடப்பாண்டில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 9 டிஎம்சி-யும், ஜூலை மாதத்திற்கு 31 டிஎம்சி-யும், ஆகஸ்ட் மாதத்திற்கு 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். கடந்த ஜூன் 1-ஆம்தேதி முதல் தற்போதுவரை 20 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும்.

ஆனால் கர்நாடகா அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இதுவரை 4.89 டிஎம்சி தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைகளிலும் முழு கொள்ளளவு நீர் இருப்பு உள்ளபோதும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி உரிமை நீரை வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறுவது அடாவடித் தனமானது; கண்டனத்துக்குரியது. வறட்சி காலம், மற்றும் மழைக் காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.

இதன் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரியில் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவுகளை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்தி தமிழ்நாட்டிற்கு நீரைத் திறக்க கர்நாடக மாநிலத்திற்கு அறிவுறுத்த வேண்டும். 


கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்..! 11 வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்..!!