சங்கராபுரம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழும் நிலையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தைச் சேர்ந்த மோஷின்கான் என்பவருக்கும் வடபொண்பரப்பி கிராமத்தை சேர்ந்த பரிதா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பரிதா தன் கணவருடன் வாழ முடியாது என கூறி விவாகரத்து கேட்டுள்ளார். அதற்கு அவரது கணவரும் விவாகரத்து வழங்க முன் வந்த நிலையில் இவர்கள், இரு தரப்பினர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை வடபொன்பரிப்பு பகுதியில் நடைபெற்ற நிலையில் பூட்டை கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், பெண் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், தகராறு ஈடுபட்டு தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி வடபொன்பரப்பி பேருந்து நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இரு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர், மேலும் இந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.