நடிகை காயத்ரி ரகுமான் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அவர் திடீரென நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேரப் போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
இந்தச் சந்திப்பு குறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவில், "அம்பேத்கர் திடலுக்கு வந்த காயத்ரி ராகுராமுக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலேவின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன்.
கருத்தியல் முரண்களைக் கடந்து மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும். அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த காயத்ரி ரகுராமை வரவேற்றுச் சிறப்பித்தோம். ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் அவர் தொடங்கவிருக்கும் சக்தி யாத்ரா வெற்றிபெற வாழ்த்தினோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.