பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்துள்ளார்.
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசத்தை காப்போம் என்ற பெயரில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், பட்டியலினத்தவர்களுக்கான நீதி என்பது யாரும் போட்ட பிச்சையல்ல அது சட்டரீதியாக அளிக்கப்பட்ட உரிமை என்று கூறியுள்ளார்.
மேலும் அடுத்த சட்டசபை தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கும் என கூறியுள்ளார். அதோடு, 70 வயது வரை நடித்து முடித்துவிட்டு இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் ஆட்சியமைக்க ஆசைப்படும் போது 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் விடுதலைகள் சிறுத்தைகள் ஆட்சிக்கு வருவதில் என்ன தவறு?என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா. தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, இவர் (திருமாவளவன்) என்ன சாதாரண நபரா? சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர். டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய மாவீரர், எல்லாம் தமிழகத்தின் தலைவிதி என பதிவிட்டுள்ளார்.