திருப்பூரில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, வேகமாக வந்த ஒரு காரில் புதிய 2 ஆயிரம் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதில் 4 பேர் இருந்தனர். அந்த காருக்கு முன்னும் பின்னும் 2 மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அந்த காரை தடுத்து நிறுத்திய போலீசார், காரில் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த காரில் ஒரு பையில் கட்டு கட்டாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தமாக ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த 6 பேரிடமும் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் பதில் அளிக்கவே, சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அதில், அவர்கள் 6 பேரும் பெருமாநல்லூரை சேர்ந்த ஒருவரிடம் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு கமிஷன் அடிப்படையில் புதிய ரூபாய் நோட்டுகளை கொடுக்க சென்றது தெரிய வந்தது. இதுபற்றி வருமான வரித்துறை அலுவலகத்திற்கும் போலீசார் தகவல் கொடுத்தனர்.
நாடு முழுவதும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் ரூ.36 லட்சம் புதிய நோட்டுகளாக கைப்பற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பணம் யாருக்காக கொண்டு செல்லப்பட்டது.. இதில் தொடர்புடைய வங்கி அதிகாரி என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.