ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்தேன் ; உடல் நிலையில் மகிழ்ச்சி : ஆளுநர் பேட்டி
ஜெயலலிதாவை நேரில் சென்று பார்த்தேன் ; உடல் நிலையில் மகிழ்ச்சி : ஆளுநர் பேட்டி
உடல்நலக் குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தமிழக ஆளுநர் வித்யாசாகர் நேற்று சென்று பார்த்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள, தமிழக ஆளுநர் வித்யாசாகர், அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று மாலை 6.40 மணிக்கு சென்றார். அவரை அதிமுக அமைச்சர்களும், மருத்துவர்களும் மருத்துவமனைக்குள் வரவேற்றனர். அதன்பின் அவர் 7.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அதன்பின் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், மருத்துவனைக்குச் சென்ற ஆளுனருக்கு அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.பிரதாப் ரெட்டி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விவரித்ததாக கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைபெற்றுவரும் வார்டுக்கு சென்று ஆளுனர் பார்த்ததாகவும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தனக்கு விரிவாக விளக்கப்பட்டது என்றும் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக கூறப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் ஆளுனர் தெரிவித்துள்ளார்.