கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படுவீழ்ச்சி அடைந்த நிலையிலும் இந்தியாவில் மட்டும் வரிகள் உயர்வு காரணமாக பெட்ரோல் டீசலின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை உயர்ந்த கூத்தும் நடந்துள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 15 தினங்களுக்கும் மேலாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து 83.37 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து 77.44 ரூபாயாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய தேவையுடைய பொருட்கள் அனைத்தும் உயர்வதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசும், மாநில அரசும் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.