வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய தொடங்கியுள்ளது.
வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவில் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதுபோலவே டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் வேகமான காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
இதுதவிர கடலோர உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.