தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். நீதிமன்றம் மற்றும் அரசு எச்சரிக்கை விடுத்தும் ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நேற்று துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கும் வகையில் போராட்டம் செய்யும் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது
இந்த நிலையில் பணிக்கு வராமைக்கு விளக்கம் கேட்டு ஓட்டுனர் தேவராஜ் என்பவருக்கும் போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை பார்த்த தேவராஜ் மனம் உடைந்து சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென தேவராஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் அதற்கு முன்னரே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூறிய தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்னொரு உயிர் பிரிவதற்குள் அரசு இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.