ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் தம்பி பாஸ்கரன் தினகரனுக்கு எதிராக புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து வருகிறது. பல புதிய கட்சிகள் முளைத்துக்கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் தரப்பிற்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
அந்நிலையில், தினகரனுக்கும், அவரின் உறவினரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரனுக்கும் இடையே மோதல் எழுந்தது. அதையடுத்து, தினகரனுக்கு எதிராக அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை திவாகரன் தொடங்கினார்.
இந்நிலையில், சசிகலா குடும்பத்தில் 3வது நபர் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல. டிடிவி தினகரனின் உடன் பிறந்த சகோதரர் டிடிவி பாஸ்கரன். இவர் ஓரிரு சினிமாவிலும் நடித்துள்ளார்.
விரைவில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிப்பேன் என பாஸ்கரன் கூறியுள்ளார். ஜெ.வின் வழியில் நான் என தினகரனும், எம்.ஜி.ஆர் வழியில் நான் என திவாகரனும் கூறியுள்ள நிலையில், எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்காக நான் என டிடிவி பாஸ்கரன் கூறியுள்ளார்.
கொஞ்சம் அதிகமாக ஆடியதால், ஜெயலலிதா இவரை கஞ்சா வழக்கில் சிறையில் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இவர் மீது போலி ஆவணங்கள் சமர்பித்து சொகுசு கார் வாங்கிய வழக்கு உட்பட சில வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.
சசிகலா குடும்பத்தில் இருந்து தனக்கு எதிராக, அதுவும் சொந்த தம்பியே அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.