20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாங்களே வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை என கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக தினகரன் மதுரை கிளம்பி சென்றார். அங்கு ஒரு விடுதியில், எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் “ தீர்ப்பு ஏமாற்றமாக முடிந்துள்ளது. 18 பேர் நினைத்திருந்தால் ஆட்சியாளர்களுடன் இணைந்து பல பலன்களை அனுபவித்திருக்க முடியும். ஆனால், எனக்காக பல தியாகங்களை செய்துள்ளனர். அடுத்து என்ன செய்வது என அவர்களிடம் ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பேன். இடைத்தேர்தல் வந்தால் 20 தொகுதிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம். இந்த ஆட்சி தொடரும் என கனவு கான்கிறார்கள். வானத்தில் ஏறி வைகுண்டம் போனதாக நினைக்கிறார்கள். அவர்களை பூமிக்கு எப்படி இறக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்” என அவர் தெரிவித்தார்.
இன்றும் அவர் தனது எம்.எல்.ஏக்களுடன் அவர் தொடர்ந்து ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.