சென்னையில் அரும்பாக்கம் பகுதிகளில் குடியிருப்புகள் அகற்றப்பட்ட விவகாரத்திற்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அங்கு பல நாட்களாக வசித்து வந்தவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “மாநகரங்களை அழகுபடுத்துவதாக கூறி தலைமுறை, தலைமுறையாக அங்கே வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்காமல், கண்மூடித்தனமான நடவடிக்கைகள் மூலம் அவர்களை வெளியேற்றும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “சென்னை, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆரம்பித்திருக்கிற இந்த அதிகார அத்துமீறல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தங்களை வளப்படுத்திக் கொள்ள சென்னையைச் சிங்காரிக்கிறோம், கூவத்தை தூய்மைப்படுத்துகிறோம் என்று கிளம்பிவிடுவார்கள். இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்களை வீதியில் நிறுத்தி விட்டு யாருக்காக இவர்கள் செயற்கை அழகை ஏற்படுத்த நினைக்கிறார்கள்? தமிழகத்தில் இனி வேறெங்கும் இதுபோல் நடக்கக்கூடாது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.