அமமுகவை ஒருக் கட்சியாக இன்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த மறுதினம் அமமுகவின் பொதுக்குழு கூட்டம் அசோக் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என்றும் தற்போதைய துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரனை அக்கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ’சசிகலாவிடம் கேட்டுதான் இந்த முடிவு எடுத்தோம். அவர்தான் தினகரன் கட்சியை ஆரம்பித்து மக்களுக்கு செயலாற்றட்டும். நான் சட்டப்போராட்டத்தை எதிர்கொள்கிறேன் எனக் கூறினார். அவர் வெளியில் வரும் போது கட்சியின் தலைவராகப் பதவியேற்பார். அதுவரை தலைவர் பதவி காலியாக வைக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து இன்று சற்று முன்னர் டெல்லியில் இன்று அமமுகவை கட்சியாக பதிவு செய்துள்ளார் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.