தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகளை மீட்க டிடிவி தினகரன் கோரிக்கை.
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர் பலிகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று வரை இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதித்தவர்களின் உயிரிழந்தோரொன் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றனஎன வருத்தம் தெரிவித்துள்ளார் அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.
அதில் சென்ற ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலை அளிக்கிறது. மேலும் லாரிகளில் உள்ள பல லட்ச ரூபாய் சரக்குகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு உதவுவதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.