அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தனது அணிக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என முடிவு செய்து இன்று 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பிற்கான கொடியையும் அவர் அறிமுகம் செய்தார். மேலும் டெல்லி ஐகோர்ட் தீர்ப்பின்படி இந்த அணிக்கு குக்கர் சின்னம் கிடைப்பதும் உறுதியாகியுள்ளது
இந்த நிலையில் இந்த அமைப்பு ஒருசில மாதங்களுக்கு மட்டுமே செயல்படும் என்று இன்று மேலூரில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் தினகரன் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: நாம் நம் கழகத்தை மீட்டு எடுக்கும் வரை குக்கர் சின்னமும் இந்தக் கொடியும் கட்சியின் பெயரும் செயல்படும். அதன்பின்னர் நாம் தான் உண்மையான அதிமுக, நமக்குத்தான் இரட்டை இலை ' என்று சூளுரைத்தார்
மேலும் கட்சியை கைப்பற்றும் முன்னர் தேர்தல் வந்தாலும் நாம் தான் ஆட்சி அமைப்போம் என்று கூறியதோடு, நமது அமைப்பு ஆட்சிக்கு வந்த பின்னர் காவிரியில் முறையான தண்ணீர் பெற்று தருவது, படித்த இளைஞர்களுக்கு தொழில்துறையில் சிறந்து விளங்க வழி வகுப்பது, மற்றும் அம்மாவின் வழியில் தமிழகத்தை நல்ல வழியில் கொண்டு செல்வது ஆகியன நடக்கும்' என்று கூறினார் டிடிவி தினகரன்