தமிழகத்தில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடும் வெயில் காரணமாக வாக்குப்பதிவு மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சேலம் அருகே ஒரு வாக்காளரும் கள்ளக்குறிச்சி அருகே ஒரு வாக்காளரும் கடும் வெயில் காரணமாக வாக்களிக்க வரிசையில் இருந்த போது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெயில் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் இன்றும் நாளையும் இயல்பை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று தேர்தல் நாளன்று கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் சேலம் அருகே சூரமங்கலம் என்ற பகுதியில் 65 வயது நபர் ஒருவர் வாக்களிக்க வெயிலில் நின்று கொண்டிருந்த போது இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட செந்தாரப்பட்டி என்ற பகுதியில் 77 வயது மூதாட்டி ஒருவர் வாக்களிக்க வந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த இரு மரணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.