விளையாட்டு வீரர்கள், வீராங்கனையரை ஊக்கப்படுத்திட, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு அனைவரும் முன்வந்து நிதியளிக்க வேண்டுகிறோம் என அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டின் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு உதவிடும் வகையிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்கள்.
இதன் தொடக்க விழாவிலேயே, நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தன் சொந்த நிதி ரூ.5 லட்சத்தை வழங்கி வாழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுத்துறை & தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு நிதியளித்து வருகின்றனர்.
இதன் மூலம், ஏழை - எளிய பின்புலத்தை சேர்ந்த திறமைமிக்க விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவது, பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்கு உதவுவது போன்றவற்றுக்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து நிதி உதவி செய்து வருகிறோம். அப்படி நிதி பெற்றுச் செல்லும் நம் வீரர் - வீராங்கனையரும் கோப்பைகள் - பதக்கங்களுடன் திரும்பி வருகின்றனர்.
எனவே, தொடர்ந்து நம் வீரர் - வீராங்கனையரை ஊக்கப்படுத்திட, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு அனைவரும் முன்வந்து நிதியளிக்க வேண்டுகிறோம். நன்கொடையை https://tnchampions.sdat.in/home என்ற இணையதளத்திலும், கீழ்காணும் வங்கி கணக்கிலும் செலுத்தலாம்.
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு துணை நிற்போம். தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையின் தலைநகராக்குவோம். நன்றி.