கடந்த சில நாட்களாக திமுக போராட்டங்களில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அவருக்கு இளைஞரணி இணைச் செயலாளர் பதவி கொடுக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
திமுகவை கடந்த காலங்களில் குடும்ப கட்சி என விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் கருணாநிதி குடும்பத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் திமுகவுக்கு வந்திருக்கிறார். அவருக்கு கட்சியின் முக்கிய பொறுப்பு கொடுத்த அடுத்த அரசியல் வாரிசை உருவாக்கும் பணிகள் தற்போது ஆரம்பித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசத்துக்கு பின்னணியில் துர்கா ஸ்டாலின், சபரீசன் போன்ற குடும்ப உறுப்பினர்களும், எம்எல்ஏவும் முன்னாள் மேயருமான ம.சுப்பிரமணியனும் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக போராட்டங்களில் உதயநிதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது.
முன்னதாக மு.க.ஸ்டாலினிடம் இருந்த இளைஞரணி செயலாளர் பொறுப்பு கடந்த ஆண்டு சாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவரது செயல்பாடு அதிகமாக இல்லாமல் இருப்பதால் அந்த பொறுப்புக்கு இணைச் செயலாளராக உதயநிதியை நியமிக்க கட்சிக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் முயற்சிகள் நடக்கின்றன.
சாமிநாதனுக்கும் இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என கூறப்படுகிறது. எனவே விரைவில் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி இணைச் செயலாளராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.