சமீபத்தில் நடிகர் விஜய் பள்ளி மாணவர்களை சந்தித்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினும் பள்ளி மாணவர்களை சென்று சந்தித்துள்ளார்.
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆங்காங்கே அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள், பேச்சுவார்த்தை இப்போதே தொடங்கியுள்ளது. இதற்கிடையே நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதற்கேற்றார்போல் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அவர் சிலைக்கு விஜய் ரசிகர்கள் மாலை போட்டு மரியாதை செய்த நிலையில், தற்போது தொகுதி ரீதியாக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து பரிசளிப்பு விழாவும் நடத்தியுள்ளார் விஜய்.
நடிகர் விஜய் தமிழக முதல்வர் பதவியை டார்கெட் செய்வதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேசமயம் திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதியை முதல்வராக்க பலர் அபிப்ராயப்படுவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யின் மாணவர்கள் சந்திப்பு வைரலாகியுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் திருச்சியில் பள்ளி மாணவர்களை சந்தித்து சேர்ந்து அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு அவர்களுடன் பேசியுள்ளார்.
இந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைராலாகியுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், நடிகர் விஜய்யும் மாணவர்களை நோக்கி சென்றிருப்பது முதலமைச்சர் சீட்டுக்கான மறைமுக மோதலின் தொடக்கம் என்பது போல பலரும் பல கருத்துகளை பேசி வருகின்றனர். விஜய் அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கினால் மட்டுமே இதற்கான விடை தெரிய வரும். ஆனால் விஜய் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் விரும்பினால் கட்சி தொடங்க உரிமை உண்டு என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.