மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய கட்சியான பாஜக சமீபத்தில் நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்று படு தோல்வியடைந்தது.
இதனையடுத்து பாஜகவை நோட்டாவுக்கு போட்டியாக சித்தரித்து பலரும் கிண்டலடித்து வருகின்றனர். சமீபத்தில் கால் டாக்சி ஒன்று இதனை கிண்டல் செய்து விளம்பரம் வெளியிட்டது.
சமீபத்தில் கரூரில் பேசிய அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். தமிழகத்தில் டெபாசிட் வாங்க முடியாத நிலையில்தான் தேசியக் கட்சிகள் உள்ளன. நோட்டாவைவிடக் குறைவான வாக்குகளைப் பெற்றதுதான் தேசியக் கட்சிகளின் சாதனை என்றார்.
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் செய்தியாளர்களிடம் பேசிய போது நோட்டாவை வைத்து பாஜகவை மீண்டும் அட்டாக் செய்துள்ளார். தமிழகத்தில் பாஜக பின்னடைவை நோக்கி செல்கிறது. ஆர்கே நகர் தேர்தலில் நோட்டாவை மிஞ்ச முடியவில்லை. கன்னியாகுமரியில் மீண்டும் பொன்னார் போட்டியிட்டால் டெபாசிட் வாங்குவாரா என்பது சந்தேகம் தான் என விளாசியுள்ளார்.