நீங்கள் இணக்கமாக செயல்பட்டு மக்கள் கஷ்டங்களை தீர்க்க போகிறீர்களா. இல்லை உங்கள் ஈகோ பிரச்னையில் மக்களை துயரப்படுத்த போகிறீர்களா? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று கோவையில் இறகுப்பந்து மைதானத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தூத்துக்குடி வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாக நிதி அளிப்பு குறித்து சொல்லியுள்ள நிலையில், மத்திய அரசு மீது பழி போடுவதில் மாநில அரசின் செயல்பாடு உள்ளது. தேசிய பேரிடர் குழு களத்தில் பணி செய்யும் போது, முதல்வர் ஏன் டெல்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் இருந்தார்.
பண அரசியல் பேசாமல் மக்களின் துயரத்தை துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களிடம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
நீங்கள் இணக்கமாக செயல்பட்டு மக்கள் கஷ்டங்களை தீர்க்க போகிறீர்களா. இல்லை உங்கள் ஈகோ பிரச்னையால் மக்களை துயரப்படுத்த போகிறீர்களா. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பிரதமரை சந்திக்க மட்டும் முதல்வர் செல்லவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு சென்றவர் அப்படியே பிரதமரை சந்தித்துள்ளார். உதயநிதி சொன்னதால் தான் ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்களா? அவர்கள் சொல்லி தான் பேரிடர் மீட்புக்குழுவினர் வந்தார்களா? வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.