பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை சமூக வலைத்தளங்களில் விமர்சினம் செய்வதற்கு தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வதற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
பாஜக மாநில தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், தான் இருக்கும் கட்சிக்கு ஏற்ப மதவாத அரசியல் கண்ணோட்டத்தில் அவ்வப்போது கருத்துகளை சொல்லி வருகிறார்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மேல்ஜாதி ஆதிக்க மதவாத கட்சியில் தம்மை உட்படுத்திக் கொண்டதால் இடத்துக்கு ஏற்ப அவர் தெரிவித்துவரும் கருத்துகள் எதிர்விளைவைத்தான் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும்.
இருந்தாலும், அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் - பெண்ணொருவர் ஒரு கட்சியின் பொறுப்பாளராக இருக்கும் நிலையில், ஆபாசமாகவும், கொச்சைத்தனமாகவும் பதிவு செய்வது உகந்ததல்ல.
பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட தலைவர் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பெண்களை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல. பொதுவாழ்விற்குப் பெண்கள் வந்தால் இந்நிலைதான் என்ற நிலை உருவாகிவிடக் கூடாதல்லவா?
டாக்டர் தமிழிசை அவர்களும், எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் அவசரத்தில் வார்த்தைகளை நிதானமின்றிப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.