சுர்ஜித்திடமிருந்து இதுவரை எந்த சுவாசத்தையும் கேட்கமுடியவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து, குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 4 நாட்களாக போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டி, குழந்தையை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.
நள்ளிரவில் ரிக் என்ற இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீடீரென இயந்திரம் பழுதானதை தொடர்ந்து, இரண்டாவது இயந்திரம் கொண்டுவரப்பட்டு அதிகாலை 4 மணி முதல் தோண்டும் பணியை ஆரம்பித்தனர். மேலும் கடினமான பாறையை உடைக்க சென்னையிலிருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் இயந்திரம் வரவழைக்கப்படுகிறது எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் களத்தில் இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “அசைவின்றி உள்ள குழந்தை சுர்ஜித்திடம் இருந்து எந்த சுவாசத்தையும் கேட்கமுடியவில்லை, நம்பிக்கையின் பேரில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார்.
மேலும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இது குறித்து நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், ”குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும், கீழே கரிசல் மண் தென்பட வாய்ப்புள்ளது, பள்ளம் தோண்டும் பணி 40 அடி வரை நிறைவடைந்த நிலையில், 98 அடி தோண்டும் வரை பணி நடைபெறும், எந்த காரணத்திற்காகவும் பணி நிறுத்தப்படாது” என கூறியுள்ளார்.
சுர்ஜித்தை உயிருடன் மீட்க தீவிர பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் இதற்காக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.