நேற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைகள் பற்றிய விவரம் அப்போதைய முதல்வர் பன்னீர் செல்வத்துக்குத் தெரியும் எனக் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் இறுதிக்கட்டமாக அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (ஜனவரி 21) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜரானார். காலை 10 மணியளவில் ஆஜரான அவரிடம், மாலை 4 மணி வரை விசாரணை நடைபெற்றது. பலமணி நேர விசாரணைக்குப் பின் வெளியே வந்த அமைச்ச்ர் விஜயபாஸ்கர் ‘ஆணையத்தின் கேள்விகளுக்கு முழுமையாகப் பதிலளித்துள்ளேன்’ எனக் கூறி சென்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் ‘பன்னீர் செல்வம் முழுமையான மருத்துவ விவரங்களை அறிந்திருந்தும் சில விஷயங்களை மறைத்துக் கூறினார் என்பன போன்ற சிலப் பதில்களை அவரிடமிருந்து பெற்றுள்ளேன்’ எனத் தெரிவித்தார்.
இதனால் துணை முதல்வர் ஓபிஎஸ் -க்கு புதிதாக சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.