தமிழகத்தில் இந்த ஆண்டும் மருத்துவ நுழைவுப்படிப்பிற்கு நீட் தேர்வு உறுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக விண்ணப்பிக்கும் முறையும் இணையதளத்தின் மூலம் தொடங்கிவிட்டது.
நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு இணையதள வசதி மற்றும் இணையதள அனுபவம் இருப்பதால் அவர்கள் எளிதில் விண்ணப்பித்துவிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தின் ஒருசில கிராமப்புற மாணவர்களுக்கு இணையத்தின் மூலம் எப்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது என்றே தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் பல கிராமங்களில் இணையவசதி இல்லை. இதனால் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் குழப்பத்தில் உள்ளதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி விண்ணப்பிக்கும் முறை ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ளதும் இந்த மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை தருகின்றது.
இதனை கருத்தில் கொண்டு கிராமப்புற மாணவர்களும் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் தமிழில் விண்ணப்பிக்கும் முறை வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் தற்காலிக இணையவசதி உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.