மீடியாக்களிடையே உள்ள போட்டி மற்றும் டிஆர்.பிக்காக ஒருசில ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தையும் மீறி செய்திகள் வெளியிட்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு போடும் ஒவ்வொருவரும் ஒரு ஊடகமாகவே மாறி தங்கள் இஷ்டத்திற்கு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஷ்ணுவிஷால் அபிநந்தன் விஷயத்தில் ஊடகங்களின் பொறுப்பின்மை குறித்து தனது டுவிட்டரில் காட்டமான ஒரு டுவீட்டை பதிவு செய்தார்.
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன், அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு தைரியமாக பதில் சொல்ல மறுத்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது தெரிந்ததே.
குறிப்பாக இந்தியாவில் எந்த இடத்தில் இருந்து வருகிறீர்கள்?, நீங்கள் பறந்த வந்த விமானம் எத்தகையது? உங்கள் தாக்குதல் திட்டம் என்ன? போன்ற கேள்விகளுக்கு 'ஐயாம் சாரி, இந்த கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று தைரியமாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம்கூறினார்.
ஆனால் இதே கேள்விகளுக்கு விலாவாரியாக நமது ஊடகங்கள் செய்தி மூலம் செய்தி என்ற பெயரில் பதிலளித்து பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து விபரங்களையும் கொடுத்துவிட்டது. இப்படிப்பட்ட ஊடகங்களில் இருந்து கடவுளே என் நாட்டை காப்பாற்று என்று நடிகர் விஷ்ணு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.