இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும், அதேபோல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு தோன்ற இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதியை நோக்கி மெதுவாக நகரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் 7 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.