இலங்கையில் உருவாகியுள்ள காற்றழுத்த சுழற்சி தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வருவதா;ல் இன்று மாலை முதல் மழைப் பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை மையம் போலவே சிலத் தனியார் அமைப்புகளும் தனிநபர்களும் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கொடுக்கும் முடிவுகள் துல்லியமாக இருப்பதால் மக்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் துல்லியமான வானிலை அறிக்கைகளைக் கொடுப்பவர்களில் செல்வக்குமாரும் ஒருவர்.
நேற்று அறிவித்துள்ள ஒரு அறிக்கையில் இலங்கைக்கு அருகே ஒரு புதியக் காற்றழுத்த சுழற்சி உருவாகி இருப்பதால் டெல்டா மாவட்டஙளில் இன்றிரவு முதல் மீண்டும் மழைத் தொடங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்போது மாலை முதலே மழைப் பெய்யும் என அவர் அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது ’வங்கக்கடலில், இலங்கைக்கு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த சுழற்சி இன்று காலைவரை கடலுடன் இணைந்தபடி இருந்தது. இந்த சுழற்சி வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த நகர்வு வடக்கு மத்திய இலங்கை, மத்திய இலங்கை, தெற்கு மத்திய இலங்கை வழியாக இந்திய பெருங்கடல் சென்று குமரிக்கடலுக்கு தெற்கே மாலதீவு நோக்கி சென்று மேற்கு நோக்கி செல்லும்.
இந்த காற்றழுத்த சுழற்சி வட இந்தியக் குளிரை ஈர்க்கவில்லை. அதனால் காற்றழுத்த சுழற்சியால் மழைப் பெய்யும்.அதனால் இன்று மாலை முதலே டெல்டா மாவட்டங்களில் மழைத் தொடங்கும். நாகையில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. மழை நாளை உள்மாவட்டங்களில் பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இன்று மாலையே மழை தொடங்கினாலும் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் கனமழை இருக்கும்.
டெல்டா மாவட்டங்களான நாகை,திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிழக்கு பகுதியில் மழை இருக்கும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை மட்டுமே இருக்கும். சென்னை மற்றும் திருவள்ளூரில் பெரிய அளவில் மழை இருக்காது’ என அறிவித்துள்ளார்.