Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அம்மாவுக்கு ஆஞ்சியோ செய்யாதது ஏன்? பிரிந்து சென்றது ஏன்? – சசிக்கலா அளித்த பரபரப்பு விளக்கம்!

அம்மாவுக்கு ஆஞ்சியோ செய்யாதது ஏன்? பிரிந்து சென்றது ஏன்? – சசிக்கலா அளித்த பரபரப்பு விளக்கம்!
, புதன், 19 அக்டோபர் 2022 (12:39 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து சசிகலா விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுதொடர்பான விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை அளிக்க ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தற்போது அளித்துள்ள அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்ய சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதற்கு காரணம் சசிகலாதான் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் சசிக்கலா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் “நியாயம்‌ தோற்காது. உண்மைக்கு என்றும்‌ வலிமை அதிகம்‌. அதைவிட என்‌ அக்கா, நம்‌ இதயதெய்வம்‌ அம்மா அவர்கள்‌ என்‌ அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும்‌ பார்த்துக்கொண்டுதான்‌ இருக்கிறார்‌. என்‌ மீது பழி போடுவதை நான்‌ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என்‌ மீது பழிபோடுவது ஒன்றும்‌ புதிது இல்லை. என்றைக்கு நான்‌ அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என்‌ மீது இந்த பழி போடும்‌ படலம்‌. அது. இந்த நொடி வரை தொடர்ந்து கொண்டுதான்‌ இருக்கிறது.

இதயதெய்வம்‌ புரட்டித்தலைவி அம்மா அவர்களின்‌ மரணத்தை சர்ச்சையாக்க, அதற்காக ஒரு விசாரணை ஆணையம்‌ நீதியரசர்‌ ஆறுமுகசாமி அவர்கள்‌ தலைமையில்‌ அமைத்து அதன்‌ அறிக்கையும்‌ அரசியலாக்கி விட்டார்கள்‌. தற்போது, இவர்கள்‌ பங்குக்கு என்னை விசாரிப்பதாக சொல்கிறார்கள்‌. எத்தனை முறை எந்த வடிவத்தில்‌ வேண்டுமானாலும்‌ அம்மா அவர்கள்‌ மரணத்தைப்‌ பற்றி விசாரித்து கொண்டே இருக்கலாம்‌. ஆனால்‌, உண்மை என்றைக்கும்‌ மாறாது. நம்‌ அம்மாவின்‌ மரணத்தில்‌ எந்த வித சந்தேகமும்‌ கிடையாது. அம்மா அவர்கள்‌ உடல்‌. நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில்‌ முறையான சிகிச்சைகள்‌ அளித்து நன்றாக குணமடைந்து வீட்டிற்கு இரும்ப இருந்த நிலையில்‌ துரதிஷ்டவசமாக நம்மையெல்லாம்‌ நிர்கதியாக விட்டுச்‌ சென்றார்‌ என்பதுதான்‌ எதார்த்தமான உண்மை.
webdunia

என்னையும்‌ அம்மா அவர்களையும்‌ எப்படியாவது பிரித்து அதன்‌ மூலம்‌ அரசியல்‌ ஆதாயம்‌ தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்‌ உண்மைத்‌ தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்‌ என்பதற்காகவே அம்மாவும்‌ நானும்‌ சிறிது காலம்‌ பிரிந்து இருந்து என்ன நடக்கறது என்று பார்த்தோம்‌. இந்த சதியின்‌ பின்னணி குறித்து நாங்கள்‌ தெரிந்து கொண்டவுடன்‌ மீண்டும்‌ அம்மாவோடு இருந்து வந்தேன்‌. 2012 முதல்‌ அம்மாவுக்கும்‌ எனக்கும்‌ இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும்‌.


இந்த ஆணையத்தின்‌ அறிக்கையில்‌ குறிப்பிட்டுள்ளது போல்‌ புரட்சித்தலைவி அம்மாவின்‌ மருத்துவ சிகிச்சையில்‌ ஒருபோதும்‌ நான்‌ தலையிடவில்லை. எந்த விதமான பரிசோதனைகள்‌ செய்ய வேண்டும்‌, எந்த ஏந்த மருந்துகள்‌ தர வேண்டும்‌ என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான்‌ முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள்‌. என்னுடைய நோக்கமெல்லாம்‌ அக்காவுக்கு முதல்‌ தர சிகிச்சை தர வேண்டும்‌ என்பதுதான்.

என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில்‌ அப்பல்லோ மருத்துவனை ஒரு சாதாரண மருத்துவமனை இடையாது. ஆசியாவிலேய மிகப்பெரிய மருத்துவமனை. வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு அன்றைய சூழலில்‌ ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும்‌ ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் டாக்டர்கள்‌ உட்பட அனைத்து டாக்டர்களும்‌ முடிவு எடுத்தார்கள்‌” என்று கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கம்முனு இரு...' செய்தியாளர்கள் சந்திப்பில் ஆத்திரம் அடைந்த ஈபிஎஸ்!