திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனி விமானம் மூலமாக லண்டன் செல்ல இருப்பதாக வெளியான செய்தியை கட்சியின் செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் மறுத்துள்ளார்.
கொரோனாவால் சர்வதேச விமானப் போக்குவரத்துகள் முடக்கப்பட்டு, சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், தனி விமானம் மூலம் லண்டன் செல்ல இருப்பதாகவும், அது சம்மந்தமாக மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை திமுக மறுத்துள்ளது.
இது சம்மந்தமாக கட்சியின் செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் ‘திமுக தலைவர் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் லண்டன் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது கொரோனா பரவல் காரணமாக சர்வதேசத்தில் நிலைமை சரியில்லை என்பதால் அந்தப் பயணத் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ஊரடங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் திமுக தலைவர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான பணிகளிலும் , ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் திமுக தலைவர். கொரோனா பணிகளில் தமிழக அரசின் அலட்சியத்தை உடனுக்குடன் சுட்டிக் காட்டி அவற்றைத் திருத்தி ஓர் அரசு செய்ய வேண்டிய பணிகளை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபடி ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார். அந்த வகையில்தான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து உள்ளிட்ட பல விஷயங்களில் அதிமுக அரசுக்கு தனது அழுத்தங்கள் மூலமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று அனைத்து வகைகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக தலைவருக்கு... இப்போதைக்கு லண்டன் செல்லும் எந்த பயணத்திட்டமும் இல்லை. எனவே அதற்காக யாரிடமும் கோரிக்கை வைக்கும் சூழலும் உருவாகவில்லை. மத்திய அரசிடம் இதுபற்றி திமுக தலைவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக மின்னம்பலத்தில் வெளியான செய்தியை மறுக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.