கோயம்பேட்டில் வரும் 28 ஆம் தேதி காய்கறியோடு பழ மார்க்கெட்டையும் திறக்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா அதிகரித்த சமயம் கோயம்பேடு மார்க்கெட் மூலம் அதிகமாக பரவியதால் மே முதல் கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரிக்கைகள் எழுந்தன. எனவே கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோயம்பேடு சந்தையில் கடைகளை ஒவ்வொரு கட்டமாக திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டார்.
அதன்படி உணவுப்பொருள் மொத்த அங்காடிகள் 18 ஆம் தேதியும், காய்கறி கடைகள் 28 ஆம் தேதியும் தொடங்கலாம் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கோயம்பேட்டில் வரும் 28 ஆம் தேதி காய்கறியோடு பழ மார்க்கெட்டையும் திறக்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், திருச்சி, காந்தி, கோவை, வேலூர் உள்ளிட்ட தமிழக முழுவதும் பழைய இடங்களில் மார்க்கெட்டை திறக்க அனுமதி கேட்டுள்ளதாக கூறிய அவர் கொரோனா தொற்றால் இறந்த வியாபாரிகளுக்கு பத்து லட்சம் இழப்பீடு வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
அதோடு உள்ளாட்சி ,நகராட்சி கடைகளுக்கு 6 மாதங்களுக்கு வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். பொதுமக்கள் முக கவசம்,சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.