தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன் - கருணாநிதி
, ஞாயிறு, 6 ஜனவரி 2013 (17:16 IST)
அடுத்த தி.மு.க. தலைவர் பதவிக்கு பொதுக்குழுவில் முன்மொழியும் வாய்ப்பு கிடைத்தால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட 35 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்றும், கட்சி வளர்ச்சிக்கான நிதி வசூலிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, கூட்டணி பற்றியும் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அதையும் மனதில் வைத்து செயல்படுவோம் என்று கருணாநிதி கூறினார். தி.மு.க. ஒரு முதன்மையான கட்சி. அந்தக் கட்சியில் உங்களுக்குப் பிறகு ஸ்டாலின் என்று கூறுவது தவறில்லையா? என்ற கேள்விக்கு, தி.மு.க.விற்கு அடுத்த தலைவர் ஸ்டாலின் என்று நான் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி நான் பேசியதாக எடுத்துக்காட்ட முடியாது. அப்படியே நான் பேசியிருந்தாலும் என்ன தவறு. மு.க.ஸ்டாலின் வரக்கூடாதா? பா.ம.க.வில் இருந்து 2,000 பேர் தி.மு.க.வில் சேர்ந்த நிகழ்ச்சியில், என்னுடைய சமுதாய முன்னேற்ற சமத்துவ உணர்வுகளுக்கு எனக்குப் பிறகும் ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபடுவார் என்றுதான் குறிப்பிட்டேன். தி.மு.க. தலைவராக எனக்குப் பிறகு ஸ்டாலின் வருவார் என்று நான் கூறவில்லை. தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். கட்சி தேர்தலில் குறிப்பாக தலைமை கழக தேர்தலில் தலைவராகவோ, பொதுச் செயலாளராகவோ ஒருவர் நிற்க வேண்டும் என்றால் அதை ஒருவர் முன்மொழிந்து பொதுக்குழுவில் தான் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அப்படி முன்மொழியக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு வருமேயானால் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் பெயரை முன் மொழிவேன். அழகிரியும் தலைவர் பதவியை விரும்புகிறாரே? என்ற கேளவிக்கு, யார் யார் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் பொதுக் குழுவில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். தேர்தல் முறைப்படி நடைபெறும் என்று கருணாநிதி பதிலளித்தார். இறுதியாக, தே.மு.தி.க.வுடன் கூட்டணி வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, தே.மு.தி.க.வில் தி.மு.க. என்று இருக்கிறதே என்று பதிலளித்துள்ளார் கருணாநிதி.