நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிளம்பி வருஷம் உத்தராயணம் வஸந்தரிது சித்திரை மாதம் 01ம் தேதி இதற்குச் சரியான ஆங்கிலம் 14 ஏப்ரல் 2018 அன்றைய தினம் தினசுத்தி அறிவது சனிக்கிழமை கிருஷ்ண திரயோதசியும் - உத்திரட்டாதி நக்ஷத்ரமும் - மாஹேந்திர நாமயோகமும் - வணிஜை கரணமும் - மீன ராசியில் - சிம்ம நவாம்ச சந்திர அம்சத்தில் - மேஷ லக்னத்தில் - சிம்ம நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 2.18க்கு - காலை 7.02க்கு தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. திசா இருப்பு சனி திசை 16 வருஷம் 6 மாதம் 8 நாட்கள்.
புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் நவகிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் உலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் வழியில் அமைந்திருக்கிறது. தமிழ் புத்தாண்டு சர நெருப்பு லக்னமான மேஷ லக்னத்தில் பிறக்கிறது. லக்னாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் நட்பு வீடான குரு வீட்டில் சஞ்சாரம் பெற்றிருக்கிறார். மீன ராசி உத்திரட்டாதி நக்ஷத்ரத்தில் ஆண்டு பிறக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் லக்னாதிபதி பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்திலேயே உச்சமாக இருப்பதும் - பாக்கியாதிபதி குரு லக்னத்தைப் பார்ப்பதும் மிக நல்ல யோக அமைப்பாகும்.
விளம்பி வருடம் விளைவு கொஞ்ச மாரி
அளந்து பொழியும் அரசர் களங்கமுடன்
நோவான் மெலிவரே நோக்கரிதாகுங் கொடுமை
ஆவா புகலவரி தாம்.