ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச்சிறப்புண்டு. இம்மாத வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் மட்டுமின்றி, இம்மாதத்தில் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் திருமணமான பெண்கள் விரதமிருந்தால், மாங்கல்ய பலம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இம்மாத வெள்ளிக்கிழமைகளில் யார் அம்மனை வேண்டி விரதமிருந்தாலும், அவர்கள் நினைப்பது நிறைவேறும்.
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. அந்த வெள்ளிக்கிழமைக்குரிய அம்மனை வேண்டினால், நிச்சயம் நினைப்பது நிறைவேறும் என்பது ஐதீகம்.
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் ''கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி'' அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும்.
அதுமட்டுமல்லாமல் திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும்.
துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம்.