அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னரே கோலமிடவேண்டும். கோலத்தில், சானத்தின் பசுமையானது விஷ்ணுபெருமானையும், மாவின் வெண்மையானது பிரம்மாவையும், காவியின் செம்மையானது பரமேஸ்வரரையும் குறிக்கின்றன.
வீட்டு வாசலை அழகாகச் சுத்தப்படுத்தி, வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவேண்டும். முடியாதவர்கள் நீர் தெளித்தும் கோலம் இடலாம். ஏற்கெனவே பயன்படுத்தாத தூய்மையான தண்ணீரில்தான் வாசலைச் சுத்தப் படுத்தவேண்டும்.
அரிசி மாவில் கோலமிடுவது சிறப்பான ஒன்று. அதிலும் பூஜை அறையில் போடக்கூடிய கோலங்கள் வேறு, வாசலில் போடக்கூடிய கோலங்கள் வேறு. கோலத்தின் தொடக்கம் மற்றும் முடிவானது, அதன் மேற்புறமாகத்தான் இருக்கவேண்டும்.
ஆல்காட்டி விரலை பயன்படுத்தாமல் கோலமிட வேண்டும். வலது கையால்தான் கோலமிடவேண்டும். இடதுகையால் கோலமிடக்கூடாது.
குனிந்தபடி நின்றுதான் கோலம் போடவேண்டுமே தவிர, அமர்ந்துகொண்டு கோலம் போடக்கூடாது. தெற்கு திசையை நோக்கியோ, அல்லது தெற்கு திசையில் முடியும்படி கோலமிடக்கூடாது.
வாசல்படிகளில் குறுக்குக்கோடுகள் போடக்கூடாது. சுபதினங்களில் ஒற்றைக்கோடுகளில் கோலம் இருக்கக்கூடாது. இரட்டைக் கோடுகளாகத்தான் இருக்க வேண்டும்.
தெய்விக யந்திரங்களைக் குறிக்கும் ஹ்ருதய தாமரை, ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ர கோலம், நவகிரக கோலங்கள், போன்றவற்றை பூஜை அறைகளில் மட்டும்தான் போடவேண்டும். மேலும், இதை அரிசி மாவிலோ அல்லது மஞ்சளிலோ மட்டும்தான் போடவேண்டும்.
அமாவாசை மற்றும் முன்னோர்களுக்குச் சிராத்தம் செய்யும் நாள்களில் கோலம் போடக்கூடாது.