பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது.
கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர்.
லலிதா ஸகஸ்ரநாமத்தில் வரும் 480-வது ஸ்லோகமான, "பாயஸான்ன ப்ரியாயை' என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள்.
501-வது ஸ்லோகமான, "குடான்ன ப்ரீத மானஸாயை' என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம்.
526-வது ஸ்லோகமான, "ஹரித் ரான்னைக ரஸியை' என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.
அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, "தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை' என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள்.
"முத் கௌத நாஸக்த...' என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.
"ஸர்வெளதன ப்ரீதசித்தா' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள்.
இதையெல்லாம் முடித்த பிறகு 559-வது ஸ்லோகத்தில், "தாம்பூல பூரிதமுகிச்யை' என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.
"தாம்பூலம்' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம். இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம்.