புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சித்தி விநாயகருக்கு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லைகள் இருக்காது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வழிபடுகிறோம்.
புரட்டாசி மாதம் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்க புரட்டாசி மாதத்தில் விரதத்தை மேற்கொள்கிறோம்.
புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும், ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து, நைவேத்தியமாக இளநீர் படைத்து வந்தால், குடும்பத்திற்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாக கருதப்படுகிறது. கல்வித்தடை, திருமணத்தடை, நோய், பணப்பிரச்சனை உள்ளவர்கள் புரட்டாசி திருவோணம் நட்சத்திரத்தன்று பெருமாளை வழிபடுவதால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கட்கிழமையும், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாட்களாகும். அன்றைய வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடைய செய்யும்.
புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன்களை அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம், நவராத்திரி, லலிதா விரதம் ஆகிய விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.