முருகப் பெருமான் குண்டலினி சக்தி. ஒரு முறை முருகர் பிரம்ம தேவனை ஓம்காரத்தின் பொருள் கேட்கிறார். பிரம்ம தேவனோ மறந்துவிட்டதாகச் சொல்கிறார். உடனே கோபம் கொண்ட முருகர் பிரம்ம தேவனை சிறை வைக்க சொல்லிவிடுகிறார். பின் சிவபெருமான் முருகரை விளக்கம் கேட்க, ஒரு சிஷ்யனாக இருந்து கேட்டால் தான் விளக்குவேன் என சொல்லி அப்பனுக்கே உபதேசம் செய்தவராக பெருமை பெறுகிறார் முருகர்.
பிரம்ம தேவன் சிறைப் படுகிறார் என்றால் மனம் சிறைப் படுகிறது என்று பொருள். மனம் ஒரு விஷயத்தில் சிறைப்படுகிறது என்றால் அதனால் அதை தவிர வேறு எதையும் சிந்திக்க முடியாமல் போய்விடும். சிலர் உணவுக்கு அடிமையாய் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மனம் உணவில் சிறைப்பட்டிருக்கிறது என்று பொருள்.
இதே போல நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்திற்கு அடிமை தான். இப்போது இந்த சிறையிலிருந்து விடுபட வேண்டும் என்றால் உடல் வளைந்து யோகத்தில் ஈடுபட வேண்டும். மீண்டும் மீண்டும் ஓம்காரத்தை உச்சரித்து நம் மனதில் பதிய வைக்க வேண்டும். அப்போது நம் குண்ட்லினி குளிர்வடைந்து மனதை அந்தச் சிறையிலிருந்து விடுவிக்கிறது.
இது தான் சிவனார் பிரம்மதேவனுக்காக முருகரிடம் பரிந்துரைப்பதும், முருகரின் விருப்பத்துக்கு வளைந்து கொடுப்பதும் காட்டுகிறது. முருகர் மனம் குளிர்வது என்பது நம் குண்டலினி சக்தி குளிர்வதை குறிக்கிறது.
பெரும்பாலும் முருகர் சிறுவனாக சித்தரிக்கப்படுகிறார். சிறுவர்களிடம் முரட்டுத்தனம் கூடாது. அன்பாக இனிமையாக நடந்து கொள்ள வேண்டும். குண்டலினி யோகத்தை பற்றி சொல்பவர்களும் குண்டலினியின் குணங்களாக இதையே தான் சொல்கிறார்கள். குண்டலினி சக்தியை மேலெழும்ப செய்ய வேண்டும் என்றால் முரட்டுத்தனமாக முயற்சிக்கக் கூடாது. பொறுமையாகவும் நிதானமாகவும் யோகத்தில் ஈடுபட வேண்டும்.
முருகருக்கு பிடித்த உணவு பழங்கள். குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யவும் நிறைய பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பரிந்துரைக்கப் படுகிறது. முருகருக்கு ஆறு முகங்கள் உண்டு. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. குணடலினி சக்தியும் மனித உடலின் ஆறு சக்கரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஒவ்வொரு சக்கரத்தில் இருந்து அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுதும் அது ஒவ்வொரு விதமாக தன்னை வெளிப்படுத்திகிறது.
முருகரின் தோற்றமும் இதற்கு பொருந்துவதாக இருக்கிறது. முருகர் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர். குண்டலினி சக்தி தியானத்தில் ஈடுபடும் எவருக்குமே நெற்றிப் பொட்டில்தான் குவியும்.