சாரதா நவராத்திரி தமிழகத்தில் நவராத்திரியாகவும், வட மாநிலங்களில் துர்கா பூஜையாக இது கொண்டாடப்படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியாக ஒரு காரணம் உண்டு.
நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்றும் குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.
சூரியன் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னி ராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்கு உரியவராகவும், புத்திகாரகராகவும் பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர். அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலை மகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.
இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜய தசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர். சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு. கல்வி மட்டுமல்லாமல் செல்வமும், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் கொண்டாடி வழிபடுகிறோம்.
பொதுவாகவே, சாரதா நவராத்திரி என்பது பிரதமையில் தொடங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி, நவமி திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. அத்துடன் அம்பாளின் கதையை கேட்க, கேட்க கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். இதன் பலனாய் பிரிந்தவர்கள் கூட ஒன்று இணைவர். திருட்டு பயம், வீணாகப் பொருள் இழத்தல், நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் என அனைத்துமே அம்பாளை நவராத்திரியில் கொண்டாட விலகி ஓடுமாம்.
நவராத்திரியில் மட்டும் தான் அம்பாளின் கதையை வாசிக்க வேண்டும் என்பது இல்லை. நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை வாசிப்பது மிகச் சிறப்பு.