அமாவாசைகளில் மிகச்சிறப்பு வாய்ந்தது இந்த மகாளயம் தான். மா என்றால் மிகப்பெரியது என்று பொருள் அதனால் தான் நம் முன்னோர்கள் மகாளயம் என்றார்கள்.
பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.
நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்றாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் தருவது என்பது பாதுகாப்பு கவசத்துக்கு ஒப்பாகும். ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் ஸ்வேதாதேவி மூலம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம்.
மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் இந்த 15 நாட்களுக்கு மட்டும் நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம்.
நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நமது வீடு தானே. எனவே அவர்கள் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.
இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை நம் சங்கதி வாழையடி வாழையாக விருத்தியடைந்து நலம் பல பெற்று வளமோடு வாழ்வர்.