கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர்.
அஷ்டதிக்கு பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர். இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக ஐதீகம்.
அஷ்டம் என்ற சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். எட்டு திசைகளுக்கு உரிய காவலர்களையே, ‘அஷ்டதிக்கு பாலகர்கள்’, ‘எண்திசை நாயகர்கள்’ என்று அழைக்கிறோம்.
இந்திரன்: கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர், இந்திரன். இவரே தேவர்கள் அனைவருக்கும் தலைவராக உள்ளார். இவரது மனைவி இந்திராணி. இவரே அஷ்டதிக்கு பாலகர்களின் தலைவராகவும் இருக்கிறார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார்.
அக்னி தேவன்: தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுபவர். வேள்வியின்போது இடப்படும், நைவேத்தியப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய மனைவியின் பெயர் சுவாகா தேவி. இவரை வழிபாடு செய்தால் தேக வனப்பு மற்றும் தேக பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும்.
எமன்: தெற்கு திசையின் காவலராக இருப்பவர் எமதர்மன். இவர் தரும தேவன், காலதேவன், எமதர்மராஜா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் மகனான இவர், தேவர்களுள் மிகவும் மதி நுட்பம் மிகுந்தவராக கருதப்படுகிறார். இவரது மனைவியின் பெயர் குபேர ஜாயை. இவரை வழிபாடு செய்தால் நம்மை அண்டியிருக்கும் தீவினைகள் அனைத்தும் நீங்கி நல்வழி பிறக்கும்.
வருண பகவான்: மேற்கு திசையின் காவலராக இருப்பவர் வருணன். இவரை மழையின் கடவுள் என்று போற்றுகிறார்கள். இவரது மனைவியின் பெயர் வாருணி. இவரை வழிபாடு செய்தால், தேவையான மழை கிடைத்து உணவு, பஞ்சம் நீங்கும்.
நிருதி: தென்மேற்கு திசையின் அதிபதியான நிருதி தேவனின், மனைவி பெயர் கட்கி. இவரை வழிபாடு செய்தால், எதிரிகளின் பயம் நீங்கும். வீரம் பிறக்கும்.
வாயு பகவான்: வடமேற்கு திசையின் காவலர் தான் இந்த வாயு பகவான். சிரஞ்சீவியும், இவரது மனைவியின் பெயர் வாயு ஜாயை.இவரை வழிபாடு செய்தால் ஆயுள் விருத்தி கூடும்.
குபேரன்: வடக்கு திசையின் அதிபதியானவர் குபேரன். இவர் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறார். இவரது மனைவியின் பெயர் யட்சி என்பதாகும். இவரை வழிபாடு செய்வதால், சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
ஈசானன்: வடகிழக்குத் திசையின் அதிபதியான ஈசானன், மங்கலத்தின் வடிவமாக பாவிக்கப்படுகிறார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று ஈசானம் என்பது குறிப்பிடத்தக்கது. ஈசானனின் மனைவி பெயர் ஈசான ஜாயை. இவரை வழிபாடு செய்வதன் மூலமாக ஞானத்தைப் பெற முடியும்.