பித்ருக்கள் என்பது நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். அவர்கள் தங்களது சந்ததியினர் பாக்யபலம் பெற, வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பல தோஷங்கள் நிவர்த்தியாக வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களுக்கு பூலோகம் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். அதில் அமாவாசை நாள் மிகவும் சக்தி பொருந்திய நாளாகும்.
மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை எனப்படும் அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு ஆசி பெறும்போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன்தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.
இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ, அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை.
இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை, சில மனவருத்தம் தரும் நிகழ்வுகள் குடும்பத்தில் நடைபெறக்கூடும். இதற்கு காரணம், அந்த ஆத்மா சாந்தியடைய அவர்களின் சந்ததியினர் வழிபாட்டு முறைகளை சரியாக செய்யாதது தான்.
இறந்த பிறகு ஆன்மாக்களுக்கு பிறவி குணம் இருக்காது. சாத்வீக குணம் வந்துவிடும். முறையான திதி, தர்ப்பணம் கிடைக்கப் பெறும் ஒவ்வொரு ஆத்மாவும் நற்சக்தி உடையது தான். அவர்களை முறையாக வழிபாடு செய்தால், தங்களின் அனைத்து சக்திகளையும் தன் சந்ததியினரின் முன்னேற்றத்திற்கு ஆசீர்வாதமாக வழங்குவார்கள்.
முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் தில ஹோமம், எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.